கரோனா விதிகள் குறித்து அரசு முதலில் அறிவிக்கட்டும் பிறகு நாங்கள் பின்பற்றுகிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, கடிதம் எழுதியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, “இந்திய ஒற்றுமை யாத்திரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற இயலாவிட்டால் பொது சுகாதாரம் கருதி இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதனை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
நாட்டில் கரோனா பெருந்தொற்று விதிகள் அமலில் இல்லாத நிலையில், இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்திக்கொள்ள கோருவது ஏன் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா, “ராகுல் காந்திக்கு மட்டும் இவ்வாறு கடிதம் எழுதுவது ஏன்? ராஜஸ்தானில் பாஜக தலைவர் சதிஷ் புனியா மேற்கொண்டு வரும், மக்கள் ஆக்ரோஷ யாத்திரையை நிறுத்தச் சொல்லி கடிதம் அனுப்பப்பட்டதா? நாட்டில் எங்குமே கரோனா விதிகள் அமலில் இல்லை. முதலில் விதிகளை அறிவியுங்கள். பிறகு நாங்கள் அவற்றை பின்பற்றுகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
“தற்போது நாட்டின் எந்த பகுதியிலும் கரோனா கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படவில்லை. எந்த ஒரு பொதுக்கூட்டத்திற்கும் இதுவரை கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. இந்திய ஒற்றுமை யாத்திரையை மட்டும் மத்திய அரசு குறிவைப்பது ஏன்?” என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனிடையே, சீனாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. மணிஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகில் கரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனாவில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே, சீனாவுக்கான விமான சேவையை அரசு நிறுத்த வேண்டும். உலகின் பல நாடுகளில் கரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வருவது கவலைக்கு உரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.