விபத்துகளில் காயமடைந்தவர்கள் உயிரைக் காப்பாற்றும் ‘நம்மை காப்போம்-48’ மருத்துவத் திட்டத்தில் தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனை முதலிடம் வகித்ததற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம் ஆகிய இடங்களில் புதிய துணை சுகாதார நிலையங்களை மக்கள் பயன்பாட்டிற்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடன் அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அவர், முடநீக்கியல் மற்றும் விபத்து அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெறும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

அதன்பின் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ”மதுரை மாவட்டத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஒட்டுமொத்த தென்னக்கத்திற்கே மிகப்பெரிய மருத்துவ பயன்பாடு உள்ள மருத்துவமனையாக திகழ்கிறது. கடந்த டிசம்பர் 21ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.40 லட்சத்தில் எலும்பு வங்கி திறக்கப்பட்டது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் எலும்புவங்கி அமைப்பது இதுவே முதல்முறை. தற்போது மருத்துவமனைகளில் எலும்பு வங்கி பயன்பாடு மிகப்பெரிய தேவையாக உள்ளது.

கோவையில் ஒரு தனியார் மருத்துவமனை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மட்டுமே எலும்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடக்கிறது. தற்போது தமிழகத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் இதுபோன்ற எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடக்கிறது. தற்போது அந்த எலும்பு வங்கியில் உயிரிழந்த 36 நோயாளிகளிடம் இருந்து எலும்புகள் கொடையாக பெறப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த எலும்புகளைக் கொண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு போலீஸ்காரர், கபடி வீரர், வாலிபால் வீரர் உள்பட விபத்துகளில் காயமடைந்த 7 பேருக்கு எலும்பு மற்றும் சவ்வு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கடந்த டிசம்பர் 18ம் தேதி மேல்மருவத்தூர் மருத்துவமனையில் ‘இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழக எல்லையில் யாருக்கு விபத்து நேரந்தாலும் 680க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்க செய்வது, அனுமதிக்கப்ட்ட முதல் 48 மணி நேரத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை வழங்கி அவர்கள் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது.

இந்த மகத்தான திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. குஜராத்தில் சமீபத்தில் நடந்த இந்திய அளவிலான சுகாதாரத்துறை மாநாட்டில் இந்த திட்டம் பற்றி மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர். அவர்கள் இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எந்ததெந்த வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது என்று ஆலோசனை கேட்டுள்ளனர்.

இப்படி சுகாதாரத்தறையில் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்கிறது. ஆண்டுதோறும், மாதந்தோறும் இந்த திட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் காப்பாற்றப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் ‘நம்மை காப்போம் 48’ திட்டத்தில் மதுரை அரசு மருத்துவமனை தொடக்கம் முதலே முதலிடத்தில் உள்ளது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை 3,185 பேர் விபத்துகளில் காயமடைந்து இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களுக்கு ‘நம்மை காக்கும் 48’ திட்டத்தில் ரூ.3 கோடியே 5 லட்சத்து 49 ஆயிரத்து 175 ரூபாய் ஒதுக்கீடு செய்து சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இவர்களில் பலர் விபத்துகளில் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்தவர்களாவர்.தற்போது அவர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். மிகச் சிறந்த மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றி வரும் இம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியார்களை முதல்வர் பாராட்டியுள்ளார்.

இந்தத் திட்டத்தில் தமிழகம் முழுவதும் 96,807 பேர் விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதில், ஆயிரக்கணக்கானோர் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

எய்ம்ஸ் பற்றி அங்கே போய் கேளுங்கப்பா!

மா.சுப்பிரமணியத்திடம் செய்தியார்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போது நிலை என்ன என்று கேட்டனர். அதற்கு அவர், ”பலமுறை மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பி திமுக அரசின் முயற்சியால் தற்போது ராமநாதபுரம் மருத்துவமனையில் 50 மதுரை எய்ம்ஸ் மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வகுப்புகள் நடக்கிறது. அதன்மூலம், எய்ம்ஸ் மருத்துவமனை நடவடிக்கைகளை தொடங்கி எதிர்காலத்தில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளோம்.

கட்டிட வடிவமைப்பு அடுத்த மாதத்தில் நிறைவடைந்துவிடும். அதன்பிறகு டெண்டர் விடப்பட்டு 2, 3 மாதங்களில் கட்டுமானப்பணி தொடங்கிவிடும்,” என்றார்.

அப்போது அருகில் இருந்த அமைச்சர் பி.மூர்த்தி, செய்தியாளர்களிடம், “எங்களிடமே எதற்கு தொடர்ந்து கேட்கிறீர்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் போய் கேளுங்கப்பா” என்று கேலியாகக் கூறினார்.