சென்னை: நடிகர் அர்ஜுனின் பிறந்தநாளையொட்டி, லியோ படத்தில் அவர் நடித்திருக்கும் ஹரால்டு தாஸ் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை ‘லியோ’படக்குழு வெளியிட்டுள்ளது.

சுமார் 40 விநாடிகள் ஓடும் அந்த கிளிம்ப்ஸ் வீடியோ காட்சியில், ஆந்திர மாநில பதிவெண் கொண்ட காரில் இருந்து இறங்கும் அர்ஜுன், விக்ரம் படத்தின் இறுதிக் காட்சியில் நடிகர் சூர்யா வருவது போல ஹரால்டு தாஸ் கதாப்பாத்திரத்தில் மிரட்டலாக காட்டப்படுகிறார்.

அடியாட்கள் புடைசூழ ஒருவரது கையை வெட்டுவதும், சிகரெட்டை புகைத்தபடி மிரட்டலான லுக்கில் அர்ஜுன் திரும்ப, அந்த கிளிம்ப்ஸ் வீடியோவில் ஹேப்பி பா்த்டே ஹரால்டு தாஸ், ஆக்சன் கிங் அர்ஜூன் என்ற வாசகங்கள் வருகிறது. கர்ஜிக்கும் புன்னகையுடன் ‘தெறிக்க’ என்று அர்ஜுன் கூறுவது போன்று அந்த கிளிம்ப்ஸ் வீடியோ முடிவடைகிறது.

 

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள ஹரால்டு தாஸ் கதாபாத்திரம் இன்று மாலை 5 மணிக்கு அறிமுகமாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் காஷ்மீரில் நடைபெற்றன. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சேவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.