அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற சூறாவளி கடந்த 8 நாள்களாக சுழன்றடித்து வருகிறது. இந்நிலையில், ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று மெரீனாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து, தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு காவலில் இருந்த காவல் துறையினர், அவரை தடுத்து தண்ணீரை ஊற்றினர். பின்னர் காவல் நிலையத்துக்கு அனைவரையும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியபிறகு அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில்,  “ மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றனர்.

அப்போது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும்,தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான திரு.கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுகவில் சர்வாதிகாரம், அராஜகப்போக்கு அதிகரித்துள்ளதாக ஓபிஎஸ் மறைமுகமாக இபிஎஸ் தரப்பை விமர்சித்துள்ளார் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினருக்கு இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அக்கட்சியின் பொதுக்குழு நாளை கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.