தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா என்ற அறிவிப்பு வரும் 8-ம் தேதிக்கு பிறகு வெளியாக உள்ளது..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.. அரசு வழங்கியுள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது.. மேலும் ” வாரத்திற்கு 6 நாட்கள் பள்ளிகள் இயங்கும்.. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே அமர வைக்க வேண்டும்.. மாணவர்களை அமர வைப்பதில், சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..

இதனிடையே தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மாணவிகளுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.. இதே போல் ஆசிரியை ஒருவருக்கும் தொற்று உறுதியானது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா பாதித்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..

இதனிடையே காய்ச்சல், இருமல், உடல்வலி, சோர்வு, வாந்தி, பேதி போன்ற கொரோனா அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது..

இந்ந சூழலில் திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து 8-ம் தேதிக்கு பிறகு முடிவெடுக்கப்படும்.. முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்து அவர் வழங்கும் வழிகாட்டுதலின் அடிப்படையில் உரிய முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதியாகி வரும் நிலையில், பள்ளிகளை மூட வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்து வரும் நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறந்தால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.. எனவே இவற்றை எல்லாம் பரிசீலித்து அரசு உரிய முடிவெடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.