வரவுள்ள பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த தொகுப்பில் ஆவின் நெய் இடம் பெற்றதை ஆவின் நிர்வாகம் வரவேற்றுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“தமிழக முதல்வர் தமிழக மக்களின் தேவை அறிந்து அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அவரின் உத்தரவுப்படியும், பால்வளத்துறை அமைச்சர் ஆலோசனைப்படியும் ஆவின் நிறுவனமானது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை அறிவித்தார். அதில் ஆவின் சார்பாகத் தயார் செய்யப்படும் நெய்யும் இடம் பெற்றுள்ளது என்பது வரவேற்கத்தக்கது.

விவசாயிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தியையும் அன்றாட வாழ்வாதாரத்திற்குப் பயன்படும் தொழிலாகக் கருதுகின்றனர். இந்தியா ஒரு விவசாய நாடு என்றால் அதில் முதலிடம் பால் வளத்திற்குத்தான் உள்ளது. ஆவின் மூலம் தைத் திருநாளாம் பொங்கலுக்கு 100 மி.லி. அளவில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இது உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தின்படி சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறது.

ஆவின் நெய் விற்பனை மூலம் தோராயமாக ரூ.135 கோடி வருமானம் கிடைக்க உள்ளது. மாவட்டக் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள 19 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் அதாவது கால்நடை விவசாயிகள் பயன்பெறுவர்.”

இவ்வாறு ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.