தற்போதும் பாழடைந்த நிலையில்தான் தமிழகம் இந்தியாவும் இருக்கிறது; நம் தெருவில் இருந்து ஆரம்பிக்கிறது, நம் அரசியல்” என்று தனது கட்சியின் வேட்பாளர்களிடம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் காணொலியில் உரையாடினார். அப்போது பேசிய அவர் ” ‘நான் கலைஞன், கலையை மட்டும்தான் பார்ப்பேன். இங்கே தெருவில் என்ன நடக்கிறது, சாக்கடை ஓடுகிறதா என்பதை கவனிப்பதா என் வேலை. எனக்கு பரத கலை தெரியும், நடிப்பு தெரியும், எழுதத் தெரியும், பாடத் தெரியும்’… அப்படியெல்லாம் கூறிக்கொண்டிருந்த இளைஞன் நான். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாதபோது, மழை தண்ணீர் வீட்டினுள் வந்தபோது, அந்த மழைநீர் தேங்கி என்னுடைய கழிவறைக்கு செல்லமுடியாமல் இருந்தபோது, அதற்காக ஒருவருக்கு காசு கொடுக்க வேண்டிய நிலை வந்தபோதுதான், எனது கவிதையையும், கலையையும் ஓரமாக வைத்துவிட்டு, தெருவில் நடக்கிற விஷயத்தை நான் கவனிக்க வேண்டும் என்பது எனக்கு புரிந்தது. அது அனைவருக்கும் புரியவேண்டும். நீங்க எம்.ஏ, எம்.எட், பிஎஸ்சி படித்திருந்தாலும், உங்கள் வீட்டின் கழிவு நீர் சரியாக வெளியே செல்லாவிட்டால் உங்கள் கல்வியே கெட்டுப்போகும், உடம்பு கெட்டுப்போகும்.

இதிலிருந்து ஆரம்பித்து உங்களுடைய பங்களிப்பு அரசியலில் வேண்டும். இதுதான் அரசியல். நீங்கள் நினைப்பதுபோல், உச்சகட்டத்தில் தலைவர்கள் செய்யும் அரசியல் அரசியல் அல்ல. அரசியல் சேவை சார்ந்தது, சூழ்ச்சி சார்ந்தது அல்ல. இதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் நற்பணி இயக்கமாக இருந்ததை தைரியமாக கொண்டுவந்து அரசியலாக மாற்றியதே தவிர, உங்கள் அனைவரையும் இருக்கும் கழக ஆட்சிகளின் எம்எல்ஏ போல், கள்வர்களாக மாற்றுவதற்கு அல்ல. அந்த வேலைக்காக உங்களை தயாரக்கி அனுப்பி வைப்பதற்காக நான் வரவில்லை.

இங்கிலாந்து, அமெரிக்கா என்று நாம் பார்த்து ஆச்சரியப்படும் மேம்பட்ட நாடுகள் அனைத்தும் இப்படிதான் அலைக்கழிந்து, மனம் திரும்பி மாறியிருக்கிறார்கள் என்பது சரித்திரம். ராபர்ட் கிளைவ் என்பவர் அந்த ஊரில் ரவுடியாக திரிந்து கொண்டிருந்தவர். சாக்கடைகளை வழிமறித்து பெரிய ஆட்கள் மலம் கழிக்க முடியாமல் தவிக்கும்போது, அவர்களது வீடுகளில் வசூல் செய்து, அந்த மாதிரி ரவுடித்தனம் செய்து கொண்டிருந்தவர். பல ரவுடிகளை கூட்டமாக வைத்துக்கொண்டு, லண்டனை சாக்கடையாக மாற்றிக் கொண்டிருந்த ஒருவரை ’ஊரை விட்டே நாடு கடத்த வேண்டும்’ என்று, ‘நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்’ என்று இந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.

இங்கு வந்த அவர் பெரிய அளவில் போர் தொடுத்தாரே தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது பாணியை சற்றே மாற்றி, இங்கிருந்தவர்களை அடிமைப்படுத்தினார். கடைசியில் அவருக்கும் திருட்டு பட்டம் கட்டப்பட்டது… இதுதான் சரித்திரம். இதிலிருந்து மேம்பட்டு வந்தவர்கள்தான் சர்ச்சில் பேன்றோர். இப்படி இருக்கக்கூடாது, இப்படி செய்யக்கூடாது என்பதை உணர்ந்து செயல்பட்டனர். தேம்ஸ் சாக்கடையாக ஓடிக்கொண்டிருந்தது. அதனை மாற்றி குடிநீராக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இந்த மாதிரி தெருத் தெருவாக சென்ற கவுன்சிலார்களால் தானே தவிர, வேறு எப்படியும் அல்ல.

உலக யுத்தத்தில் எல்லா தெருவும், எல்லா சாக்கடையும், எல்லா கட்டடமும் இடிந்து விழுந்தபோது, எல்லாருக்கும் பொறுப்பு வந்தது. இப்படி ஒரு நிலைமை வந்தால்தான் நாம் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் வரவேண்டாம். இப்போதும் பாழடைந்த நிலையில்தான் தமிழகம் இருக்கிறது, இந்தியா இருக்கிறது. சும்மா மேம்பூச்சுக்கு அவ்வப்போது வார்னீஷ் அடித்து விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கக்கூடாது. நம் தெருவில் இருந்து ஆரம்பிக்கிறது, நம் வீட்டு வாசலில் இருந்து ஆரம்பிக்கிறது நம்முடைய அரசியல். இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வாக்குறுதிகள் எல்லாம், இதெல்லாம் தெரியுமே எனக் கூறுவதைவிட, தெரிந்த விஷயத்தை செய்யவில்லை என்பதுதான் நம்முடைய இழிநிலை. இதிலிருந்து மாற்றி இந்த அரசியலை கொண்டு செல்வதற்காகத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள்.உங்களில் யார் தவறு செய்தாலும் அது என்னையே சாரும்” என்று கமல்ஹாசன் பேசினார்.