நாளை சித்திரை பௌர்ணமி தினத்தில், சென்னை கடற்கரையில் இருக்கும் கண்ணகிச் சிலைக்கு மாலை அணிவித்து அரசு மரியாதை செலுத்தப்படும் என சட்டமன்றத்தில் 110ஆவது விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

அநீதி இழைக்கப்பட்ட அபலைப் பெண் கண்ணகியைத் தெய்வமாக்கி, அவளுக்குக் கோயில் கட்டினான் சேர மன்னன் செங்குட்டுவன். கண்ணகியைக் காப்பிய நாயகியாக்கினார் இளங்கோவடிகள். தமிழின் முதல் உரைநடைக் காப்பியமான சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகிக்கு நடக்கும் ஒரே திருவிழா சித்திரை பௌர்ணமி திருவிழாதான். வஞ்சிக்கப்பட்ட, அநீதி இழைக்கப்பட்ட, பலிகொடுக்கப்பட்ட பெண்கள் தெய்வமாக்கப்பட்டுள்ளனர். அந்தந்தக் குடும்பத்துக் குலதெய்வமாகவோ, வட்டாரத்தின், சாதியின் சிறுதெய்வமாகவோ ஆக்கப்பட்டிருக்கிறார்கள். உலகத் தொல்மரபான சிறுதெய்வ வழிபாட்டின் ஆதித் தமிழ்ப் பிரதிதான் கண்ணகி.

மதுரையை எரித்த கண்ணகி, நிராதரவாக வைகைக் கரை வழியாக 14 நாட்கள் காட்டிலும் மேட்டிலும் நடந்து சென்றடைந்த இடம்தான் மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் உள்ள விண்ணேற்றிப் பாறை. தன்னந்தனியான வனாந்திரத்தில் தனித்து நின்ற கண்ணகியை, விண்ணுலகத்திலிருந்து வந்த கோவலன் தன்னுடன் அழைத்துச் சென்றதாகவும், அதைப் பளியர் இன மக்கள் பார்த்ததாகவும் இளங்கோவடிகள் எழுதுகிறார்.

விண்ணேகும் முன், கண்ணகியின் கூற்றாக இளங்கோவடிகள் வஞ்சிக் காண்டத்தின் வாழ்த்துக் காதையில், ‘நெடுவேலான் குடியிருக்கும் இந்தக் குன்றைவிட்டு நான் அகல மாட்டேன்’ என்று எழுதியிருப்பார். கண்ணகி என்ற பெயரில் மங்கலதேவி கண்ணகிக் கோட்டம் தவிர, வேறெங்கும் கோயில் இல்லாததற்கு கண்ணகியின் கூற்றும் காரணம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கண்ணகி வழிபாடு இன்றும் அதிகமுள்ள கேரளத்திலும் இலங்கையிலும் பகவதி, திருமாவுண்ணி, ஒரு முலைச்சியம்மன், பத்தினித் தெய்யோ போன்ற பெயர்களில்தான் கண்ணகி வழிபாடு இருக்கிறது.

இரண்டாம் நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவனால் மங்கலம் செய்து, வழிபாடு தொடங்கி வைக்கப்பட்ட மங்கலதேவி கண்ணகிக் கோட்டம், 10-ம் நூற்றாண்டில் ராஜராஜனால் புனரமைக்கப்பட்டதற்கான கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. 1,800 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடக்கும் பழமையான வரலாற்று இடம்தான் கண்ணகிக் கோட்டம். மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய அரசர்கள் பற்றியும், சங்க காலத்திற்குப் பிந்தைய சிலப்பதிகாரக் காலத்துக்கும் வரலாற்று ஆதாரமாக உள்ள ஒரே இடம் கண்ணகிக் கோட்டம்.

நாவல் ஒன்று எழுதுவதற்காக, கடந்த ஆண்டு கண்ணகியும் கோவலனும் நடந்து சென்ற பாதையில் பயணம் செய்தோம். பூம்புகாரிலிருந்து மதுரை புறப்பட்ட இருவரும் நடந்து சென்ற பாதையில் பேரா.தெய்வநாயகம் வழிகாட்டலில் பயணித்தோம். இளங்கோவடிகளின் வரிகள், இன்று நமக்கு வழிகாட்டும் செயற்கைக்கோள் வரைபடங்களைவிடத் துல்லியமாக வழிகாட்டுகின்றன. மனிதர்களின் குடியேற்றம் அதிகரித்து, வீடுகளும் ஊரும் விரிவடைந்துவிட்ட நிலையில், இளங்கோவடிகள் குறிப்பிடும் மரம், செடி, கொடி, சின்னஞ்சிறு நீர்நிலைகள் காணாமல் போயிருக்கின்றன என்பதைத் தவிர, அவர் சொல்லும் கிழக்கு, மேற்கு, வடகிழக்கு என்ற வழிகாட்டுதலைத் தொடர்ந்து சென்றால், மதுரையின் கீழ்த்திசை வாயிலுக்குச் சென்று சேரலாம். அங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலைமேல் ஏறினால் கண்ணகிக் கோட்டம் வருகிறது. பூம்புகாரில் நடக்கும் இந்திர விழாவுக்கு வட திசையிலிருந்து வரும் விஞ்சை வீரனும் அவன் மனைவியும் வரும் திசையையும் எழுதும் இளங்கோவடிகளுக்குத் துல்லியமான நிலவியல் தெரிந்திருந்தது என்பது பெரும் வியப்பு. இன்று வரை மாறாத நிலமும், வாழ்வியலும் கொண்ட தமிழ் மரபின் அடையாளம்தான் கண்ணகிக் கோட்டம்.

சிலப்பதிகாரக் காலத்துக்கான ஒரே வரலாற்று ஆதாரமான கண்ணகிக் கோட்டம் சிதிலமடைந்து கிடக்கிறது. 1957-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, இரு மாநிலங்களுக்கும் சொந்தமான சுமார் 600 கி.மீ. தூரம் வனப்பகுதி இன்னும் அளக்கப்படாமல் உள்ளது. அளக்கப்படாத பகுதி, பாதுகாக்கப்பட்ட பெரியாறு காப்புக் காட்டுப் பகுதிக்குள் இருக்கிறது. தமிழ்நாட்டின் பெரியகுளம் தாலுகா எல்லைக்குள் இருந்த கண்ணகிக் கோட்டம், இன்று கேரளத்தின் ஆளுகைக்குள் சென்றுவிட்டது. 1983-ம் ஆண்டு கேரளத் தொல்லியல் துறை, தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கோயில்களின் பட்டியலில் மங்கலதேவி கண்ணகிக் கோட்டமும் இருப்பதாக அறிவித்துவிட்டது.

குமுளியிலிருந்து விண்ணேற்றிப் பாறை செல்லும் 14 கி.மீ. தூரத்துக்கு ஜீப் பாதையொன்று அமைத்து, முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது கேரளம். பெரியாறு காப்புக் காட்டுக்குள் இரண்டு மாநில வனப் பகுதியும் இருக்கிறது என்றாலும், கேரளம் தன் ஆதிக்கத்தைக் கண்ணகிக் கோட்டத்தின்மீது நிலைநாட்டியுள்ளது. தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டதாக கேரளத் தொல்லியல் அறிவித்திருந்தாலும், இடிந்து சிதிலமடைந்து கிடக்கும் கோட்டத்தைச் சீரமைக்க ஒரு ரூபாயும் செலவு செய்யவில்லை. அதற்கான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடத் தயாராக இருக்கிறது கேரள வனத் துறை.

கோயில் தமிழ்நாட்டுக்குத்தான் சொந்தம். அதைச் சட்டபூர்வமாக இரு மாநில அரசுகளும் பேசித் தீர்மானித்துக்கொள்வதற்கான அரசியல் சூழல் இரு மாநிலங்களிலும் கனிந்துள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையிலான புரிதலை, சமீபத்தில் கேரளத்தில் நடந்த அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு சர்வதேச அளவுக்கு வெளிப்படுத்தியுள்ளது. மொழி உணர்வுகளைக் கடந்து, பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுப்பதற்கு இந்த நல்லிணக்கம் அவசியமானது.

600 கி.மீ. தூர வனப் பகுதியை அளந்து, எல்லையைத் தீர்மானித்து, கண்ணகிக் கோட்டம் யாருக்குச் சொந்தம் என்று இரு மாநிலங்களும் தீர்மானிப்பதற்குள் கோட்டத்துக்குள் மிஞ்சி இருக்கும் சரிந்து விழுந்த சுவர்களும், கால்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் கண்ணகிச் சிலை இருக்கும் கருவறையும் முற்றிலும் இடிந்துபோகும். கண்ணகிக் கோட்டத்தை மீட்டெடுக்க இரு மாநில முதல்வர்களும், பண்பாட்டு அடையாளத்தைக் காக்க வேண்டிய பொதுப் புரிதலில் ஒன்றிணைய காலம் கனிந்திருக்கிறது. திமுக தன்னுடைய சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், இரு மாநிலங்களுக்கும் பொதுவான இடமாக கண்ணகிக் கோட்டத்தை அங்கீகரிப்பதற்காகக் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வுகாணும் என்று சொல்லியிருந்ததைச் சாதிக்கும் நன்முகூர்த்தம் வந்திருக்கிறது.

மதச்சார்பின்மை பேசும் காப்பியம் சிலப்பதிகாரம். ஊரை விட்டுப் பிழைப்பு தேடி, வேறொரு தேசத்துக்குப் புறப்படும் கண்ணகியும் கோவலனும் வழிபடும் கடவுள்களாக இளங்கோவடிகள் குறிப்பிடும் கடவுள்கள் சைவ, வைணவ, சமண, பௌத்த சமயங்களைச் சார்ந்தவை. மதச்சார்பின்மையைக் காக்கப் போராடும் இரண்டு மாநிலங்கள், மதச்சார்பின்மைக்கு ஆதாரமாக உள்ள வரலாற்றுக் கோட்டத்தை மீட்டெடுக்க முன்வர வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் தென்தமிழக மக்கள், அந்நிய நாட்டு எல்லையில் இருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்துவருவது போன்ற பயத்தையும் நெருக்கடியையும் அனுபவிக்கிறார்கள். ஒரே ஒரு நாள் அனுமதிக்கப்படும் சித்திரை பௌர்ணமி திருவிழாவின்போது நடக்கும் களேபரங்களை கம்பம், கூடலூர், குமுளி பகுதிகளில் நாளை சென்று நேரில் பார்த்தால் உணரலாம்.

பெரியாறு காப்புக் காட்டுக்குள் கண்ணகிக் கோட்டம் இருப்பதால்தான் இத்தனை கட்டுப்பாடுகள் என்று நியாயம் சொல்லலாம். இதே காப்புக் காட்டுப் பகுதிக்குள்தான் சபரிமலை ஐயப்பன் கோயிலும் இருக்கிறது. ஆண்டுக்கு நூறு நாட்களுக்கு மேல் வழிபாட்டுக்குத் திறக்கப்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் அங்கு அனுமதிக்கப்படும்போது, ஒரே ஒரு நாள் வழிபாட்டுக்கு வழியின்றி நடுக்காட்டில் காத்திருக்கிறாள் கண்ணகி.

வாழும் காலத்தில் அநீதி இழைக்கப்பட்டு வாழ்வைத் தொலைத்தவள் கண்ணகி. தெய்வமான பிறகும் அநீதி இழைக்கப்படுவது கண்ணகியின் தீயூழ் அல்ல, அரசியலின் தீயூழ். இரு மாநில முதல்வர்களும் அடுத்த ஆண்டு, சீரமைக்கப்பட்ட கண்ணகிக் கோட்டத்தில், காப்பிய நாயகியான கண்ணகிக்கு மாலை போட்டு, சிறப்பிக்க வேண்டும். கண்ணகியை அவள் இருக்கும் இடத்துக்குச் சென்று வழிபடுவதுதான் வரலாற்றுக்கும் இலக்கியத்துக்கும் செய்யும் பெருமையாகும்.