பாஜகவினர் ஒரே சித்தாந்தத்தை பரப்பி ஆட்சி செய்ய விரும்புகிறார்கள், எனினும் அவர்களின் எண்ணம் ஈடேற நாங்கள் விட மாட்டோம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் “எனது பாட்டியின் மீது 32 குண்டுகள் பாய்ந்தன. எனது தந்தை வெடிகுண்டு தாக்குதலில் துண்டுத் துண்டாக சிதறினார்.
ஆனால், இன்று உங்களின் கொள்கைகள் பாகிஸ்தானையும், சீனாவையும் ஒற்றுமையாகச் செய்துள்ளது. இது ஆபத்தானது. இது பிரச்சினையை உருவாக்கும். நாட்டுக்கு இப்போது உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் அச்சுறுத்தல் உள்ளது. நீங்கள் யாருடைய குரலுக்கும் செவி சாய்க்காமல் நடந்துகொள்கிறீர்கள். எனக்கு முன்னால் பேசிய பாஜக எம்.பி. கமலேஷ் பஸ்வான் தவறான கட்சியில் இருக்கிறார். அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்” என்றார்.
இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:
நம் நாட்டை 2 புதிய நாடுகளாக பாஜக பிரிக்கிறது. ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்ட 100-500 கோடீஸ்வரர்கள். 2வது கோடிக்கான ஏழைகள் உள்ளனர். இந்தியாவின் ஏழைகள் பயப்படுகிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் யாருக்கும் பயப்படுவதில்லை. வளர்ச்சி என்பது ஏழைகள், விவசாயிகளின் முயற்சியால் நடைபெறுகிறது. எந்தக் கட்சியின் கொடையுமல்ல.
இந்துஸ்தான் என்பது வெவ்வேறு சித்தாந்தங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் கொண்ட பூங்கொத்து. ஆனால் பாஜகவினர் ஒரே சித்தாந்தத்தை பரப்பி ஆட்சி செய்ய விரும்புகிறார்கள். எனினும் அவர்களின் எண்ணம் ஈடேற நாங்கள் விட மாட்டோம். நான் நேற்று நாடாளுமன்றத்தில் சொன்னேன். உண்மையான இந்துஸ்தானை பாஜகவுக்கு காட்டுவோம் என்று கூறிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.