கள்ளக்குறிச்சி: அமலாக்கத்துறை சோதனை விவகாரத்தில், அதிமுகவைப் போல்தான் திமுக என்று பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம்; ‘ஈடி’க்கும் பயப்பட மாட்டோம் என்று கள்ளக்குறிச்சி கட்சி நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்று, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், திமுக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், ரிஷி வந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் புவனேஸ்வரி பெருமாள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சார்பில் அமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல் நிகழ்ச்சியாக மாடாம்பூண்டியில் 100 அடி உயரமுள்ள திமுக கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து ரிஷி வந்தியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர்களிடையே பேசிய உதயநிதி, “ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்கு ஒரு அலுவலகம் இருக்கும். ஆனால் அதிமுக-விலோ சசிகலா, தீபா அணி, ஓபிஎஸ், இபிஎஸ் என மூன்று, நான்கு அலுவலகங்கள் இருக்கின்றன.

இதனால் அக்கட்சித் தொண்டர்கள் எங்கு செல்வது என திணறி வருகின்றனர். இதே போல் பாஜகவுக்கும் ஐடி, ஈடி உள்ளிட்ட அணிகள் உண்டு. இவர்கள் தேர்தல் நேரத்தின் போது இறக்கி விடப்படுவார்கள். நான் குறிப்பிடும் இந்த பாஜக அணியில் உள்ள 95 சதவீதத்தினர், மற்ற கட்சியினர் வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஊழல் ஒழிப்புப் பற்றி பேசி வரும் தமிழக ஆளுநர், அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர், பி.வி. ரமணா உள்ளிட்டோருக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி மறுக்கிறார். கடந்த ஆட்சியின் போது, அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் சிக்கியவர்களிடம் சோதனை நடத்தவில்லை. மாறாக அவர்களை அடிமைப்படுத்திக் கொண்டனர். அதுபோல திமுக-வையும் மத்திய பாஜக நினைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியோ, ஓபிஎஸ் தலைமையிலான ஆட்சியோ அல்ல. தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி. எனவே உங்களது மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈடி-க்கும்பயப்பட மாட்டோம். உங்கள் பம்மாத்து வேலையெல்லாம் இங்கு நடக்காது” என்றார்.

முன்னதாக திருக்கோவிலூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், ஐயனார், மணலூர்பேட்டை பேரூர் செயலாளர் ஜெய்கணேஷ், திருக்கோவிலூர் நகரத் தலைவர் முருகன்,துணைத் தலைவர் உமா மகேஸ்வரி, திருக்கோவிலூர் ஒன்றியக்குழுத் தலைவர் அஞ்சலாட்சி அரசக்குமார், துணைத் தலைவர் தனம் சக்திவேல்,

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் உதயா, ரிஷி வந்தியம் ஒன்றியக் குழுத் தலைவர் வடிவுக் கரசி சாமி சுப்ரமணியம், துணைத் தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, ரிஷி வந்தியம் ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரை முருகன், பாரதிதாசன், தியாகதுருகம் ஒன்றியக் குழுத் தலைவர் தாமோதரன், துணைத் தலைவர் நெடுஞ்செழியன், தெற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மாவட்டப் பிரதிநிதி மடம் பெருமாள் உள்ளிட்டோர் அமைச்சர் உதயநிதியை வரவேற்று சால்வை அணிவித்தனர்.