திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளியின் விலை கிலோவிற்கு ரூ.2 ஆக சரிந்த நிலையில் வாங்க ஆள் இல்லாததால் விவசாயிகள் சாலையில் கொட்டிச் செல்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள காந்தி மார்க்கெட்டுக்கு தக்காளி பெட்டிகள் வரத்து அதிகரித்து உள்ளது.  எனினும், தக்காளியை வாங்க, வர்த்தகர்களோ, மக்களோ போதிய ஆர்வம் காட்டவில்லை. தக்காளியின வரத்து அதிகரித்துள்ள நிலையில், அதன் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. இது விவசாயிகள் இடையே பெரும் வேதனை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு கிலோ தக்காளி ரூ.2க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், தக்காளி பயிர் செய்த விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விலை வீழ்ச்சி, நஷ்டம் ஏற்படுத்திய வேதனையில் விவசாயிகள் கொண்டு வந்த தக்காளியை சாலையில் கொட்டிச் சென்றனர். தக்காளி விளைச்சல் அமோக அளவில் இருந்த போதும், அதற்கான விற்பனை விலை குறைவாக இருப்பது அவற்றை பயிர் செய்தவர்களுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளது. இதனால், தக்காளிகளை அரசே கொள்முதல் செய்து வேறு வகைகளில் அவற்றை பயன்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.