வணிகச் சான்றிதழ் தொடர்பாக மத்திய மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வது தொடர்பான வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சாலை போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல், மின்னணு வாயிலாக, வாகன் தளத்தில் ஒரே விண்ணப்பம் மூலம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
வணிகச் சான்றிதழ் சம்மந்தமாக மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989- இல் ஒரு சில திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த வரைவு அறிவிக்கையை 5.5.2022 அன்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பதிவு செய்யாத அல்லது தற்காலிகமாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வணிகச் சான்றிதழ் அவசியமாக உள்ளது. அத்தகைய வாகனங்கள், மோட்டார் வாகனங்களின் வணிகர்/ உற்பத்தியாளர்/ இறக்குமதியாளர் அல்லது விதி 126 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு சோதனை முகமை அல்லது மத்திய அரசு குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு நிறுவனத்திடம் மட்டுமே இருக்க முடியும்.
எளிதாக வர்த்தகம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கையில், இதுபோன்ற முகமைகள் பல்வேறு வகையான வாகனங்களுக்கு வணிகச் சான்றிதழ் மற்றும் வணிகப் பதிவுக் குறியீடுகளை, சாலை போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல், மின்னணு வாயிலாக, வாகன் தளத்தில் ஒரே விண்ணப்பம் மூலம் பெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கப்படும் வர்த்தகப் பதிவுக் குறியீட்டு எண்ணிக்கைகளின் அடிப்படையில் கட்டணங்களைச் சீர்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. வர்த்தகச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம், 12 மாதங்கள் முதல் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.