காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் பவானி, கொடுமுடி, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், கரையோரம் உள்ள 600 வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 2 லட்சம் கன அடிக்கு மேல் நேற்று முன்தினம் உபரி நீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, ஈரோடு மாவட்டத்தின் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பகுதி மக்களுக்கு ஏற்கெனவே வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், காவிரி ஆற்றின் கரைப்பகுதியை ஒட்டியுள்ள பவானி பசுவேஸ்வரர் வீதி, பாலக்கரை, காவிரி நகர், காவிரி வீதி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் நேற்று முன் தினம் வெள்ள நீர் புகுந்தது. வெள்ள நீரின் அளவு நேற்று மேலும் அதிகரித்ததால், 250-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அங்கு குடியிருந்தோர், பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. பவானியில் மட்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர் 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், அம்மா பேட்டையில் உள்ள பழைய மாரியம்மன் கோயில் தெரு, காமராஜர் வீதி, பாரதியார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் நீர் சூழ்ந்தது. இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள், அங்குள்ள முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரை பகுதியில் உள்ள முனியப்பன் கோயில் வீதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை நீர் சூழ்ந்தது. அங்கு குடியிருந்த 500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு, பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், கொடுமுடியில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள கொளாநல்லி, சத்திரம்பட்டி ஆகிய பகுதிகளில் 85-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இங்கு வசித்து வந்த 250-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஊஞ்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வெள்ளம் புகுந்தது. செல்லாண்டி அம்மன் கோயில் பின்புறம் உள்ள புகலூரான் வாய்க்காலில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டன.
காவிரி கரையோரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 600 குடியிருப்புகளைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர். கரையோரப் பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.