சென்னை: இந்து தமிழ் திசை உங்கள் குரல் தொலைபேசி சேவையைத் தொடர்பு கொண்டு அரசு அழகப்பன் என்ற வாசகர் கூறியதாவது: நான் ஆவடி மாநகராட்சிக் குட்பட்ட நாராயணபுரம் ஓம் சக்தி கனோபஸ் குடியிருப்பில் வசித்து வருகிறேன். எங்கள் குடியிருப்பின் பின்புறம், வசந்தம் நகர் பகுதியில் இருந்து மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயின் ஒரு பகுதி எங்களது குடியிருப்பின் மத்தியில் செல்கிறது. இந்நிலையில், இந்த மழைநீர் கால்வாயில் வசந்தம் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் இந்தக் கால்வாயில் வருகிறது.
இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகரித்து நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். இதுகுறித்து, ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, நாராயணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்வாய் பணி விரைந்து முடிக்கப்படும். இப்பணி நிறைவடைந்ததும் வசந்தம் நகர் பகுதியில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவது தடுக்கப்படும் என்றனர்.