இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 3,377 ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 17,000 ஐ கடந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேர நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,377 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 4,30,72,176 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 17,000 ஐ கடந்துள்ளது. இருப்பினும், நேற்று ஒரே நாளில் 2,496 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாட்டில் கரோனாவிலிருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை 98.74% ஆக உள்ளது.

அன்றாட பாசிட்டிவிட்டி விகிதம் 0.71% என்றளவிலும், வாராந்திர பாசிடிவிட்டி 0.63% என்றளவிலும் உள்ளது. கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் 100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்பதே பாசிடிவிட்டி விகிதம் எனக் கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 60 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 23 ஆயிரத்து 753 என்ற நிலையில் உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 188.65 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

டெல்லி நிலவரம் என்ன? நாட்டிலேயே அதிகபட்சமாக தலைநகர் டெல்லியில் 4,832 பேர் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 11ல் டெல்லியில் மொத்த பாதிப்பு 601 ஆக இருந்தது. இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மாநில மருத்துவத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், “டெல்லியில் கரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நிலையில் உள்ளோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. குழந்தைகள் மத்தியில் கரோனா பரவல் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. குழந்தைகள் மத்தியில் நோயின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது” என்றார்.