சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு, கல்லூரி மாணவி சத்யாவை தள்ளி படுகொலை செய்துவிட்டு சதீஷ் என்ற இளைஞர் தப்பி ஓடினார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மகளை இழந்த சோகத்திலும், மன அழுத்தத்திலும் இருந்த தந்தை மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழந்ததார். இன்று அதிகாலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவரை உறவினர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர். அப்போது அவர் வழியிலேயே உயிரிழந்ததாக அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மகள் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளாது.
நடந்தது என்ன? சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு, காவலர் குடியிருப்பில் வசிப்பவர் மாணிக்கம்(47). கால் டாக்ஸி ஓட்டுநர். இவரது மனைவி ராமலட்சுமி(43) ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இவர்களுக்கு சத்யா (20) என்ற மகள் இருந்தார். இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தயாளன் என்பவரும் ஆதம்பாக்கம் ராஜா தெருவில் வசித்து வந்தார். இவரது மகன் சதீஷ்(23), சென்னை விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சத்யாவும் சதீஷும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சிலமாதங்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு நேற்று மதியம் 1 மணியளவில் வந்த சத்யா, முதலாவது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்தார். சிறிது நேரத்தில் அங்கு வந்த சதீஷ், சத்யாவிடம் சென்று பேசியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆத்திரமடைந்த சதீஷ், தாம்பரத்தில் இருந்து நடைமேடைக்குள் வந்துகொண்டிருந்த மின்சார ரயில் முன்பு சற்றும் எதிர்பாராத வகையில், சத்யாவை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் சத்யா, ரயில் சக்கரத்தில் சிக்கி, தலை துண்டித்த நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணநேரத்தில் நடந்துமுடிந்த இந்த கொடூர சம்பவத்தைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் சதீஷை பிடிக்க முயன்றனர் ஆனால் அகப்படாமல் ஓடிவிட்டார்.
சதீஷ் கைது: மாணவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை போலீஸார் ஈசிஆர் பகுதியில் கைது செய்தனர். சதீஷைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஈசிஆர் பகுதியில் சுற்றித் திரிந்த அந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.