சென்னை: காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியதைக் கண்டித்து, சென்னை சாஸ்திரிபவனை முற்றுகையிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை வாங்கியது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் டெல்லியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இது எதிர்க்கட்சித் தலைவர்களை முடக்க மேற்கொள்ளப்படும், ஆளும் மத்திய அரசின் சர்வாதிகாரப் போக்கு என்று கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான கட்சியினர் நேற்று சென்னைசாஸ்திரிபவனை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்களை போலீஸார் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட கட்சியினரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக, கே.எஸ்.அழகிரிசெய்தியாளர்களிடம் கூறியதாவது: சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்காக, அசோசியேட்டட் ஜர்னலிஸ்ட் என்ற நிறுவனத்தின் கீழ் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை 1937-ல்ஜவஹர்லால் நேரு, சர்தார் பட்டேல் உள்ளிட்டோர் இணைந்து தொடங்கினர்.

இந்தப் பத்திரிகை நிறுவனம் நலிவுற்றதை தொடர்ந்து, ரூ.90 கோடியை அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடனாகக் கொடுத்தது. அந்தத் தொகையை பத்திரிகை நிறுவனம் திருப்பித் தரமுடியாததால், ஈக்விட்டி பங்குகளாக மாற்றி, காங்கிரஸ் சார்பில்தொடங்கப்பட்ட யங் இந்தியன் நிறுவனத்துக்கு இந்த பங்குகள் வழங்கப்பட்டன. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திலும் விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு அரசியல் கட்சி கடன்வழங்குவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த பிரிவின் கீழும் குற்றமாகாது. மேலும், யங் இந்தியன் நிறுவனத்தால் யாரும் பணப் பலன் பெறவில்லை. இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் பயன்பெற்றதாகக் கூறி, அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்திருக்கிறது.

சர்வாதிகாரிகள், தங்களது கருத்துகளுக்கு மாறானவர்களை, எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்து விசாரணை செய்வதும், ஊழல், தேசத் துரோகம் செய்தார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை திணித்து சிறையில் அடைப்பதும் வழக்கமானது.

பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்துப் போராடும் ராகுல் காந்தி, நிச்சயம் இந்திய அரசியலில் நட்சத்திரமாகப் பிரகாசிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, பலராமன், சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, எம்எல்ஏ-க்கள் விஜயதரணி, ரூபி மனோகர், அசன்மவுலானா, காங்கிரஸ் மகளிரணித் தலைவி சுதா, மாவட்டத் தலைவர்கள் சிவ.ராஜசேகரன், எம்.எஸ்.திரவியம், ரஞ்சன்குமார், டில்லிபாபு உள்ளிட்டோர் பங்கேற் றனர்.