44-வது செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் பலம் வாய்ந்த அமெரிக்காவை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது இந்திய பி அணி. கிராண்ட் மாஸ்டரான டி.கேஷ், உலகின் 5-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஃபேபியானோ கருணாவை தோற்கடித்து அசத்தினார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஓபன் பிரிவின் 8-வது சுற்றில் இந்திய பி அணி, பலம் வாய்ந்த அமெரிக்காவை எதிர்த்து விளையாடியது. இதில் 16 வயதான கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 45-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். குகேஷுக்கு இது 8-வது வெற்றியாக அமைந்தது.

இதேபோன்று சத்வானி ரவுனக் 45-வது நகர்வின் போது லினியரை தோற்கடித்தார். அதேவேளையில் சரின் நிகல் அரோனியன் லெவோனுக்கு எதிரான ஆட்டத்தையும், பிரக்ஞானந்தா வெஸ்லி சோவுக்கு எதிரான ஆட்டத்தையும் டிராவில் முடித்தனர். இதன் மூலம் அமெரிக்காவை 3-1 என்ற கணக்கில் இந்திய பி அணி தோற்கடித்தது.

இந்திய சி அணி 1-3 என்ற கணக்கில் பெரு அணியிடம் தோல்வியடைந்தது. கங்குலி சூர்யா சேகர், அபிஜீத் குப்தா ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வியடைந்தனர். எஸ்.பி.சேதுராமன், கார்த்திகேயன் முரளி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிராவில் முடித்தனர்.

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அர்மேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய ஏ அணி 1.5-2.5 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. எஸ்.எல்.நாராயணன், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டங்களை டிரா செய்தனர். அதேவேளையில் ஹரிகிருஷ்ணா பென்டலா 102-வது நகர்வின் போது சர்கிசியன் கேப்ரியலிடம் வீழ்ந்தார்.

மகளிர் பிரிவில் இந்தியா ஏ – உக்ரைன் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்றகணக்கில் டிராவில் முடிவடைந்தது. கோனேரு ஹம்பி, முசிச்சுக் மரியாவுக்கு எதிரான ஆட்டத்தையும், ஹரிகா துரோணவல்லி, முசிச்சுக் அனாவுக்கு எதிரான ஆட்டத்தையும் ஆர்.வைஷாலி, உஷெனினா அனாவுக்கு எதிரான ஆட்டத்தையும் தானியா சச்தேவ், புக்ஸா நடாலியாவுக்கு எதிரான ஆட்டத்தையும் டிரா செய்தனர்.

இந்திய பி அணியானது 3.5-0.5 என்ற கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது. இந்திய சி அணிபோலந்திடம் 3-1 என்றகணக்கில் தோல்வியடைந்தது.

 

தானியாவுக்கு விருது:

மகளிர் பிரிவில் உக்ரைனின் புக்ஸா நடாலியாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது ரிலாக்ஸாக வலம் வந்த இந்திய ஏ அணியின் தானியா சச்தேவ். இவருக்கு நேற்று முன்தினம் சர்வதேச செஸ் கூட்டமைப்பு நடத்திய விழாவில் ‘சமூக வலைதள நட்சத்திரம்’ விருது வழங்கப்பட்டது.