சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் ஓபன் பிரிவின் 8-வது சுற்றில் இந்திய பி அணி, பலம் வாய்ந்த அமெரிக்காவை எதிர்த்து விளையாடியது. இதில் 16 வயதான கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 45-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். குகேஷுக்கு இது 8-வது வெற்றியாக அமைந்தது.

வெற்றி குறித்து இந்திய பி அணியின் வீரர் டி.குகேஷ் கூறும்போது, “பேபியோனோ எனக்கு மிகவும் விருப்பமான வீரர். அவருக்கு எதிராக விளையாடியது பெருமையாக உள்ளது. இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சற்று மோசமாக விளையாடினேன். ஆனால் ஒரு கட்டத்தில் நிலைநிறுத்திக்கொண்டேன். அப்போது பேபியாயோனா செய்த தவறால் அங்கிருந்து வெற்றியை நோக்கி நகரத் தொடங்கினேன். இதுவரை ஆட்டத்தை மகிழ்ச்சியாக விளையாடி வருகிறேன். இன்னும் கடினமான 3 சுற்றுகள் உள்ளது.

பேபியானோவுக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்னர் வெற்றி குறித்துசிந்திக்கவில்லை. இந்தஆட்டம் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்ற நோக்கில்தான் அணுகினேன். ஆட்டத்தில் கருப்பு, வெள்ளை என எந்த நிற காய்களுடன் விளையாடினாலும் வெற்றி பெறவே முயற்சி செய்வேன். இந்தியாவில் விளையாடுவது மகிழ்ச்சிதான். ஆனால் நம்நாட்டில் விளையாடுவதுதான் எனது சிறப்பான செயல்திறனுக்கு காரணமா என்பதை உறுதியாக என்னால் கூறமுடியவில்லை. சிறந்த மனநிலையில் போட்டியை அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாடுகிறேன்” என்றார்.

ஃபேபியானோ கருணாவை வீழ்த்திய இந்திய வீரர் டி.குகேஷ் 729 ரேட்டிங் புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 18 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தை பிடித்தார்.