சென்னை: கோவையில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். இன்று காலை கோவை, வ.உ.சி மைதானத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் மற்றும் அவற்றின் மாதிரிகளின் கண்காட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஓராண்டு சாதனை விளக்க ஓவிய கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இந்தக் கண்காட்சியில் சிவகங்கை மாவட்டம் – கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம் மற்றும் மணலூர், தூத்துக்குடி மாவட்டம் – சிவகளை, அரியலூர் மாவட்டம் – கங்கைகொண்டசோழபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் – மயிலாடும்பாறை, விருதுநகர் மாவட்டம் – வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் – துளுக்கார்பட்டி, தர்மபுரி மாவட்டம் – பெரும்பாலை ஆகிய ஏழு இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைக்கப்பெற்ற தொல்பொருட்களின் மாதிரிகள் மற்றும் புகைப்படங்கள் மக்களின் பார்வைக்குக் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஒவியக் கண்காடசியும் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து, பல கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்குப் பருவ மழை மீட்பு பணிகள், மருத்துவம், வேளாண்மை, கல்வி, தொழில், உள்ளாட்சி என அனைத்து துறைகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு புதிய திட்டங்கள் தொடர்பான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற ஓராண்டு சாதனை விளக்க ஓவியங்களை முதல்வர் ஸ்டாலின் ரசித்துப் பார்த்தார்.