அம்மா மினி கிளினிக்குகளை மூடும் முடிவைக் கைவிட்டு, தொடர்ந்து சிறப்பாக நடத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் ஏழை, எளிய மக்கள் நலன் காக்கும் திட்டமாகும். தமிழக அரசு, 2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடப்படுவதாக அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. காரணம் அம்மா மினி கிளினிக்குகள் மூலம் ஏழை, எளிய மக்கள் பெரும் பயனடைந்துள்ளனர். மேலும் இந்த கிளினிக்குகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரது பணியும் சிறப்பானது.

அம்மா மினி கிளினிக்குகள் மூலம் மாதாந்திர மருந்துகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் அம்மா மினி கிளினிக்குகள் நடைபெறுவதில் ஏதேனும் குறை இருந்தால் அதைச் சரிசெய்து, தொடர்ந்து நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளலாம். அதை விடுத்து மூட முடிவெடுத்துவிட்டு, ஏதேனும் காரணங்களைக் கூறினால் அதைப் பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் ஏற்கமாட்டார்கள். எனவே தமிழக அரசு, அம்மா மினி கிளினிக்குகளைத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தி, பொதுமக்களுக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.