நாட்டு மக்கள் எவரும் பசிப்பிணியால் வாடக் கூடாதென சிந்தித்து ஒவ்வொருவருக்கும் பணிகளைப் பிரித்து அளித்து, ஊதியமாய் உண்ண உணவளித்து அனைவரையும் காத்தனர் அரசர்கள். அதனால், கலை நயம் மிக்க கோவில்களைக் கட்டியும், அதில் பற்பல திருவிழாக்களை நடத்தியும் மக்களைக் களிப்போடு வாழச் செய்தனர். ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொருவிதமான விழாக்கள் வெவ்வேறு திங்களில் எடுக்கப்படச் செய்து மக்களிடையே சகோதரத்தன்மையை வளர்த்தார்கள். அந்த வகையில் வந்ததே கோவில் திருவிழாக்கள்.

தேர்த் திருவிழா போன்ற மக்கள் கூடி கொண்டாடும் திருவிழாக்கள் எல்லாம் நம் முன்னோர் நமக்களித்த வாழ்க்கை வரைமுறைகள். தேர் என்கிற ஒன்றும், அதனைப் பெரிதாக அமைத்து மக்களை ஒன்றுசேர்த்து, ஒரே பணி செய்யச் செய்து, அதை ஒரு சமூக நிகழ்வாக்கும் அரிய பணியாக காலம் காலமாக கடைப்பிடிக்கப் பட்டுவருகிறது. இது போன்ற தேர் இழுக்கும் பழக்கம் வேறு எந்த நாட்டிலும் இருக்காது. இந்திய மண்ணுக்கு அதுவும் குறிப்பாகத் தமிழ் மண்ணுக்குச் சொந்தமானவை. மக்களை ஒன்றுபடுத்தி ஒற்றுமை காண நம் பண்டை நாள் அரசர்கள் இது போன்ற ஆன்மிகத் திருவிழாக்களை ஊக்குவித்து அமைதி காத்து நல்லாட்சி நடத்தினர். அன்று தொடங்கிய அந்த நற்பணி இன்றும் இங்கே நடைபெறுவது நாம் செய்த புண்ணியம்.

திருவிழாவின் மகுடம்!

திருவிழாக்களிலெல்லாம் மகுடம் போன்றது தேர்த் திருவிழா. பெரிய கோவில்களில் உற்சவ மூர்த்திகளை அலங்கரித்து உயர்ந்த தேர்களில் அமர்த்திக் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தேரை இழுத்து வலம்வரச்செய்தனர்.

அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் குடிகொண்டுள்ள திருவானைக்கா சித்திரை தேர்த் திருவிழா பங்குனி மாதம் பத்தொன்பதாம் நாள் நடந்தது. கோவிலைச் சுற்றி இருந்த நான்கு வீதிகளிலும் பலர் சாலை ஓரமாகக் கடை விரித்து சின்னச்சின்ன பொருட்களை விற்றுக்கொண்டிருந்தனர். பிளாஸ்டிக் ஊதல், பொம்மை, காற்றாடி இன்னும் எத்தனையோ பொருட்கள் விற்பனைக்குக் கடை போடப்பட்டிருந்தன. தானத்திலெல்லாம் சிறந்தது அன்னதானம் என்பதறிந்து தேர் வலம் வர இருந்த நான்கு வீதிகளிலும் இருந்த வீடுகளில் நீர்மோரும், பானகமும் எல்லாருக்கும் விநியோகிக்கப்பட்டன. பல இல்லங்களிலும், பல அமைப்புகள் சார்பாகவும் சாம்பார் சாதமும், தயிர் சாதமும், பெரிய பெரிய பூவரச இலைகளிலோ தொன்னைகளிலோ விநியோகிக்கப்பட்டன.

காலை ஆறு மணிக்குத் தொடங்க விருந்த தேர்த் திருவிழாவில் பங்கு கொண்டு பயன்பெற நான்கு மணிக்கே வீட்டைவிட்டுப் புறப்பட்டு வந்துவிட்ட அக்கம்பக்கத்துக் கிராமவாசிகள், அங்கே வழங்கப்பட்ட அன்னதானத்தால் தங்களின் பசித் தீயை அணைத்து, ஆனந்தம் அடைந்தனர்.

இரண்டு பெரிய தேர்கள்!

ஒன்று .அம்பாள் அகிலாண்டேஸ்வரி ஆடை ஆபரணங்களோடு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு, அருள் பாலித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் அழகிய தேர். இன்னொன்று சுவாமி (ஜம்புகேஸ்வரர்) சிங்காரித்துக்கொண்டு கண்கவர் ஆபரணமும், ஆளுயர மாலையும் அணிந்துகொண்டு நின்று அருள் புரியும் தேர். இரண்டுமே பார்ப்பவருக்குப் பெரிதாகத் தோன்றும். தேர்களில் மரத்தால் ஆன பீடத்தின் சிற்ப வேலைப்பாடு கவர்ந்திழுத்தது. அதன் மேலே நான்கு மூலைகளிலும் வண்ணத் துணிகளால் அழகாகத் தொங்கவிடப்பட்ட தோரணங்களும், அவற்றில் இருந்த வேலைப்பாடும் பிரமிக்கவைத்தன. தேரின் வடம் என அழைக்கப்பட்ட தடிமனான கயிறும் தேரின் மிகப் பெரிய சக்கரங்களும் பார்ப்பவரைப் பரவசமடைய வைத்தன. ‘இந்தத் தேர்களின் வடம் பிடித்து இழுத்தால், வினையெல்லாம் நீங்கி வாழ்வு சிறக்கும்’ என்கிற நம்பிக்கையால் பக்தர்கள் வடம் பிடித்துத் தேரை இழுத்து, வாழ்வில் சிறக்க கோவில் வாசலில் அந்த நாளில் கூடியிருந்தனர். இதனால்தான் அன்று ‘ஊர் கூடி தேரிழு’ என்றிருக்கிறார்கள் .

தேர் இழுப்பதைப் பார்த்து ரசிக்கக் கொடுத்துவைக்க வேண்டும். தேரின் மேலே இருப்பவர் ‘இழு’ என்று சொன்ன வுடன், எல்லோரும் ஒரே நேரத்தில் ‘ஓம் நமச்சிவாய’, ‘ஓம் நமச்சிவாய’ என்னும் தாரக மந்திரத்தை ஒருசேர சத்தமிட்டு ஒரே நேரத்தில் தங்கள் ஒருமித்த பலத்தோடு அந்தத் தேரின் வடத்தைப் பிடித்து இழுக்க, தேர் அசைந்து அசைந்து நகர்ந்தது.