சென்னையில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார். ரவுடிகளையும், தலைமறைவுக் குற்றவாளிகளையும் கைது செய்யுமாறு போலீஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றங்களை முற்றிலும் தடுத்து நிறுத்த, அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவ்வப்போது ஆலோசனை வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தற்போதைய சட்டம்- ஒழுங்கு நிலை தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் காவல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றற இந்தக் கூட்டத்தில், சென்னையில் நடைபெற்ற குற்ற நிகழ்வுகள், அதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விவரம், தலைமறைவுக் குற்றவாளிகள், முடிக்கப்பட்ட வழக்குகள், நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட தகவல்களை, நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர்களிடம் காவல் ஆணையர் கேட்டறிந்தார்.

ரவுடிகள் மோதலை முற்றிலும் ஒழிக்கவும், குற்றச் செயல்களை கட்டுக்குள் கொண்டு வரவும், தலைமறைவு ரவுடிகளைக் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில், கூடுதல் ஆணையர்கள் செந்தில்குமார், என்.கண்ணன், லோகநாதன், தேன்மொழி, பிரதீப்குமார் மற்றும் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் பங்கேற்றனர்.