சென்னை: ’லியோ’ வழக்கமான படமாக இருக்காது என்று தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் மாணவர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். ’லியோ’ படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த லோகேஷ், ‘லியோ’ படத்தின் 2-வது சிங்கிள் இப்போதைக்கு வராது. அது கொஞ்சம் தாமதாகலாம். காரணம், இது வழக்கமான படம் அல்ல. ‘கைதி’ போன்ற ஒரு படமாக இருக்கும்” என்று பதிலளித்தார்.
‘லியோ’ LCU-வின் (லோகி சினிமாட்டிக் யுனிவர்ஸ்) ஓர் அங்கமாக இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “லியோ குறித்து இப்போதே எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் படம் பார்க்கும்போது, அது உங்களுக்கு எந்த ஆச்சர்யத்தையும் தராது” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “விஜய்யை பற்றி பேச இந்த ஒரு மேடை போதாது. நான் எல்லா நடிகர்களையும் சார் என்றுதான் அழைப்பேன். ஆனால், விஜய்யை மட்டும்தான் அண்ணா என்று அழைப்பேன். ‘இரும்புக்கை மாயாவி’ 10 வருடமாக எழுதிய கதை. அதுதான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முடிவில் ’ரஜினியை வைத்து படம் இயக்குவது உண்மையா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “அதை தயாரிப்பு நிறுவனம்தான் அறிவிக்க வேண்டும். நான் இப்போதே அதுகுறித்த சொல்ல முடியாது” என்றார்.