கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்றுமுதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் பூ, பழம், காய்கறி மற்றும் உணவு தானியங்கள் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில், ஒலிபெருக்கி மூலமாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மார்க்கெட் காவலாளிகளுக்கு வாக்கி, டாக்கி கொடுக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் மார்க்கெட் வளாகத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொரோனா விதிமுறைகள் மீறும் வியாபாரிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டை போல கோயம்பேடு மார்க்கெட் மூலமாக மக்களுக்கு கொரோனா பரவிவிடக்கூடாது என்பதில் அங்காடி நிர்வாக அதிகாரிகள் மிக கவனமாக உள்ளனர். தொற்று பரவலை தடுக்க பலகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள மினி கிளினிக்கில் கடந்தாண்டு மார்ச் முதல் இதுநாள்வரை கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த இன்றுமுதல் அங்காடி நிர்வாக முதன்மை சாந்தி தலைமையில் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகளும் முக கவசம், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி ஒலிபெருக்கி மூலமாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அங்காடி நிர்வாகம் முதன்மை அலுவலர் சாந்தி கூறும்போது, ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா கட்டுப்பாட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகின்றோம். மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்துவரும் வாகனங்களை சோதனை செய்த பின்னர் மார்க்கெட் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கவேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளோம்.
கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்காதவர்கள், முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே, வியாபாரிகள் கண்டிப்பாக முக கவசம் அணியவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்’ என்றார்.