நாட்டில் பயண நேரத்தை குறைக்கும் நோக்கில், வந்தே பாரத் அதிவேக ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்த ரயில்களுக்கான பெட்டிகள் இருக்கை வசதியுடன் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 117 வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்க ஐசிஎப் ஆர்டர் பெற்றுள்ளது. இந்நிலையில், இவற்றில் 75 ரயில்கள் மட்டும் இருக்கை வசதியுடன் தயாரிக்கப்படும். மீதமுள்ள ரயில்களில் இரவு நேர பயணத்தின் போது தூங்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

எனவே, இருக்கை வசதியுடன் 75 வந்தே பாரத் ரயில்களுடன் தயாரிப்பை நிறுத்திக் கொள்ளவும் மீதமுள்ளவற்றை தூங்கும் வசதியுடன் தயாரிக்கவும் ஐசிஎப் நிர்வாகத்துக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தற்போது நாட்டில் 6 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை 30-ம் தேதி ஹவுரா ரயில் நிலையத்தில் இருந்து 7-வது வந்தே பாரத் ரயிலை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

நாட்டில் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அடுத்த பட்ஜெட் தாக்கலின் மேலும் 300 – 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.