கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறை தீர்க்கும் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன. மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்கள் உட்பட அனைத்து குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.