கேரளாவில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்திற்குப் பரவாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், செப்.1 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,538 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 22 பேர் உயிரிழந்துள்ளனர். 1,753 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 26,10,299. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,43,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,57,884.

இந்நிலையில் கேரளாவில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கரோனாவால், இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அண்டை மாநிலமான தமிழகமும் கரோனா பரவலைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது. அதன் பொருட்டு இன்று (திங்கட்கிழமை) தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

கேரளாவில் அதிகரித்து வரும் கரோனா காரணமாகத் தமிழகம் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதால் அதற்காக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன, வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பது எப்படி என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here