ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் மக்களை ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப் பிறகும் தலிபான்கள் தடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 100 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம் ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலையும் தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான் ஆட்சிக்கு அஞ்சி, ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்து வருகின்றனர்.
காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானத்தில் இறக்கைகளில் ஏறி பயணித்த சிலர் உயிரிழந்தது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் காபூலில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை விமானத்தை அனுப்பி மீட்டு வருகின்றன. அங்கிருந்து விமானங்களில் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே காபூல் விமான நிலையத்தில் ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இடையே ஆப்கனில் சிக்கியுள்ளவர்களை மீ்ட்கும் பணியை உலக நாடுகள் விரைவுபடுத்தியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறுவதற்கு ஆகஸ்ட் 31-ம் தேதி காலக்கெடுவாக அமெரிக்கா நிர்ணயித்துள்ளது. அதற்குள் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டு குடிமக்களையும் அழைத்து வந்து விட வேண்டும் என்ற இலக்குடன் அமெரிக்கா செயல்படுகிறது.
ஆனால் அந்த தேதியை தள்ளிப்போட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு நேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆகஸ்ட் 31-ம் தேதி என்ற இலக்கை தாண்டி செயல்பட முடியாது என அதிபர் ஜோ பைடன் ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
இதனால் காபூல் விமான நிலையில் 31-ம் தேதிக்குப் பிறகு தலிபான்கள் வசமாகும் எனத் தெரிகிறது. அதன் பிறகு அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டினரை மீட்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற நினைப்பவர்களைத் தடுக்க மாட்டோம் என்று தலிபான்கள் கூறி வருகின்றனர். ஆனால் காபூல் விமான நிலையம் நோக்கி வரும் ஆப்கன் மக்களை தலிபான்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிப்பதாக தகவல் வெளியாகி வருகின்றன.
எனவே ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு பிறகும் ஆப்கனில் இருந்து வெளியேற விரும்பும் மக்கள் செல்ல தலிபான்கள் அனுமதிக்க வேண்டும் எனெ்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட 100 நாடுகள் விடுத்த கூட்டறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து, உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மற்றுமின்றி ஆப்கானிஸ்தானியர்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தலிபான்கள் எந்தவிதத் தடையும் விதிக்கக் கூடாது என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.