கரோனா தடுப்பு ஊசி மருந்துதயாரிப்புக்கான மூலப்பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது அவசியம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.
ஜி-30 நாடுகளின் சர்வதேச வங்கிகளின் 36-வது ஆண்டு மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்று அவர் பேசிய விவரங்களை டெல்லியில் உள்ள மத்தியநிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: அனைவருக்கும் போதிய நிதி ஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதற்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காண வேண்டியது அவசியம். அதேபோல மக்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம்.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு சர்வதேச அளவிலான நிதி ஒதுக்கீடு மற்றும் அதை செயல்படுத்துவதற்கு வலுவான கட்டமைப்பு வசதிகள் அவசியம். கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையை எடுக்கும் அதேசமயம் புவி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியகட்டாயமும் உள்ளது. வரும் காலங்களில் எதிர்கொள்ள வேண்டியபல இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும் அளவுக்கு உலக சுகாதார நிறுவனம் (டபிள்யூஹெச்ஓ) மிகுந்த பொறுப்புடன் செயலாற்றவேண்டிய அவசியம் ஏற்பட்டுஉள்ளது.
தற்போது உருவாகியுள்ள கரோனா பரவலைத் தடுக்க இதற்குரிய தடுப்பூசி மருந்து தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் வழி ஏற்படுத்த வேண்டும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து தடுப்பூசி மருந்து மற்றும் மூலப்பொருள் விநியோகம் சிறப்பாகமேற்கொண்டது என்று அமைச்சர்சுட்டிக்காட்டினார்.- பிடிஐ