குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளில் ஒன்று போடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது 42 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கவனமாகக் கடைபிடிக்காவிட்டால் கரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்.
இத்தகைய சூழலில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே அடுத்தடுத்த அலைகளிலிருந்து தப்பிக்கச் சிறந்த வழியாகும். மேலும், மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்றும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் மாறுபட்ட கருத்துகள் நிலவும் சூழலில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் சோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கியது.
மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிறுவனம் 2-வது கட்ட கிளிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது. 3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிவடைந்தால் செம்படம்பர் முதல் குழந்தைகளுக்கு செலுத்த அனுமதி கிடைக்கும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறியதாவது:
குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் தடுப்பூசி 3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முடிவுகள் வெளியானால் அந்த மருந்தை குழந்தைகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.