அடுத்து வரும் 40 நாட்கள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என்றும், ஜனவரி மத்தியில் கரோனா தொற்று அதிகரிக்கலாம் என்றும் மத்திய சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.
சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கடந்த 24-ம் தேதி முதல் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதோடு, அனைத்து வெளிநாடுகளில் இருந்தும் வரும் பயணிகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனையில் கடந்த 24, 25, 26 ஆகிய 3 நாட்களில் மட்டும் 39 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்து வரும் 40 நாட்கள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானவை என மத்திய சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மத்தியில் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவை கூறுகின்றன. இதற்கு முன் ஏற்பட்ட தொற்றின் அடிப்படையில் கிடைத்த அனுபவத்தின்படி இவ்வாறு யூகிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 188 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது 3,468 பேர் கரோனா தொற்று சிகிச்சையைப் பெற்று வருகிறார்கள். இது உலக அளவிலான கரோனா நோயாளிகளில் 0.01 சதவீதம். கரோனா நோயாளிகள் குணமடையும் சதவீதம் தற்போது 98.80 சதவீதமாக இருப்பதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத் துறை, கடந்த 24 மணி நேரத்தில் 141 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 43 ஆயிரத்து 483 பேர் குணமடைந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.