தோனி இல்லாத சிஎஸ்கே, சிஎஸ்கே கிடையாது என இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார்.

வயது காரணமாக தோனி நடப்பு 2021 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறக்கூடும் எனவும், அவர் சென்னை அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பொறுப்பை ஏற்கக்கூடும் என்றும் ரசிகர்களிடையே ஒரு கருத்து நிலவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியை உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளுக்கும் வழி நடத்தியவர் மகேந்திர சிங் தோனி.

2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். 2020 ஆகஸ்ட் மாதத்தில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இந்தச் சூழலில்தான் அவர் இந்த சீசனுடன் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவார் என்ற பரவலான செய்தி உலா வந்தது.

இந்த நிலையில், நான் நிச்சயமாக எனது ஓய்வை சென்னையில்தான் அறிவிப்பேன். ஆனால், நான் மஞ்சள் ஜெர்சியில் இருப்பேனா என்று உறுதியாகக் கூற முடியவில்லை என்று தோனி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் கிரேம் ஸ்வான் கூறும்போது, “தோனி சிஎஸ்கேவின் வீரர் மட்டுமல்ல. தோனி இல்லாத சிஎஸ்கே, சிஎஸ்கே கிடையாது. வீரர் என்பதைத் தாண்டி தோனி சிஎஸ்கேவின் சொத்து. அடுத்த ஆண்டு நடக்கும் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தோனியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.