இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில், 6 பெண் புகார்தாரர்களில், 4 பேரின் புகார்களில் புகைப்பட, வீடியோ ஆதாரங்களை டெல்லி போலீஸ் இணைத்துள்ளது. இதில் 3 ஆதாரங்கள் பாலியல் துன்புறுத்தல்களுடன் தொடர்புடையவை.

பிரிஜ் பூஷண் சிங் மீது இந்தியாவின் முன்னணி பெண் மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகார் தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீஸ் வியாழக்கிழமை (ஜூன் 15) சுமார் 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

முன்னதாக இந்த விவகாரத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு 180-க்கும் மேற்பட்டோரை விசாரித்ததுடன், கோண்டாவில் உள்ள பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் இல்லத்துக்குச் சென்று அவரின் உறவினர்கள், மல்யுத்த சம்மேளனத்தின் பணியாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் ஆகியோரது வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தது.

இந்தநிலையில் ஆங்கில் நாளிதழ் ஒன்று இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில், குற்றப்பத்திரிகையில், ஆறு மல்யுத்த வீராங்கனைகளின் கூட்டு வாக்குமூலங்கள், 70-80 சாட்சிகளின் வாக்குமூலங்கள், புகைப்படங்கள்,வீடியோ மற்றும் தொலைபேசி அழைப்பு விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப ஆதாரங்களை உள்ளடக்கியுள்ளது.

புகைப்பட, வீடியோ ஆதாரங்கள்: இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், ஆறு மல்யுத்த வீராங்கனைகளும் தங்களின் புகார்களில் பல்வேறு வகையான சம்பவங்களைத் தெரிவித்துள்ளதால் ஆறு புகார்களும் தனித்தனியாக குற்றப்பத்திரிக்கையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு புகார்களுக்குமான ஆதாரமாக புகைப்படங்கள், வீடியோக்களை இணைக்கப்பட்டுள்ளன. ஆறு புகார்களில் நான்கு புகார்களுக்கு புகைப்பட ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்கள் பதக்கம் அளிக்கும் விழாக்கள், குழுப்புகைப்படங்கள், மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் எடுக்கப்பட்டவை. புகார் தெரிவிக்கப்பட்ட சம்பவங்கள், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அலுவலகம், விளையாட்டுப் போட்டிகள், முகாம்கள் மற்றும் நிகழ்வுகளில் நடந்துள்ளது என்று தெரிவித்தார். இவ்வாறு அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, விசாரணையின் ஒரு பகுதியாக, பிரிஜ் பூஷண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஐந்து நாடுகளின் மல்யுத்த கூட்டமைப்புகளுக்கு விபரம் கேட்டு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியிருந்தது. அந்நாடுகளில் நடந்த போட்டியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், போட்டியின் போது விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கியிருந்த ஹோட்டலில் பதிவாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் போன்றவைகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.அவர்களின் பதில் கிடைத்ததும் இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

போராட்டம்: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் கடந்த ஏப்ரல் இறுதியில் இருந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி பிரிஜ் பூஷண் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷனைக் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட வந்த மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில் மே 28ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பின் போது நாடாளுமன்றம் நோக்கில் பேரணி செல்லவும் முயன்றனர். அதன் காரணமாக காவல்துறையின் கைது நடவடிக்கைகளுக்கு ஆளாகினர். அவர்கள் மீது வழக்குகளும் தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து கங்கையில் தங்கள் பதக்கங்களை வீச உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டி மத்திய அரசுக்கு கெடு விதித்தனர்.

ஒத்திவைப்பு: இந்தநிலையில், ஜூன் 3ம் தேதி இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சாக்‌ஷி, வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா சந்தித்தனர். அதன் பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் அழைப்பின் பேரில் ஜூன் 7ம் தேதி சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் அவரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஜூன் 15 ம் தேதிக்குள் பிரிஜ் பூஷண் மீதான விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்தார். அதனைத் தொடர்ந்து, ஜூன் 15 ம் தேதி வரை தங்களின் போராட்டத்தினை நிறுத்தி வைப்பதாக வீரர்கள் அறிவித்திருந்தனர். இந்தநிலையில், ஜூன் 15ம் தேதி டெல்லி போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதன் மீதான விசாரணை ஜூன் 22ம் தேதி நடக்க இருக்கிறது.