வங்கக் கடலில் நிலைபெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில், “வங்கக் கடலில் நிலைபெற்றுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாகத் தமிழகத்தில் நாளை காலைவரை மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. காற்று அதிகம் வீசும் என்பதால் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அதிக அளவு மழைப் பொழிவு இருக்கும் என்பதால் ரெட் அலர்ட் (ரெட் அலர்ட் என்பது 20 செ.மீ. அதிகமாக மழைப் பொழிவு இருக்கும் என்பதைக் குறிக்கும்) என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்றே எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.