கோவை: துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட கோவை சரக டிஐஜி சி.விஜயகுமார், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று காவல் துறை பணியை விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார்.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த சி.விஜயகுமாரின் சொந்த ஊர் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகேயுள்ள அணைக்கரைப்பட்டி கிராமம். விஜயகுமார் 1976, செப்டம்பர்,21-ம்தேதி அன்று பிறந்தார். இவரது பெற்றோர் செல்லையா- ராஜாத்தி. செல்லையா கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ராஜாத்தி அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். விஜயகுமாருக்கு சகோதரிகள் 2 பேர் உள்ளனர். தனது பள்ளிக்கல்வியை தமிழ்வழிக்கல்வியில் படித்து முடித்தார். பின்னர், உயர்கல்வியில் பிஇ மெக்கானிக் படித்து விட்டு வேலைக்காக சென்னைக்கு வந்தார். படித்தபடிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் ஜெராக்ஸ் கடையில் வேலைக்கு சேர்ந்து கொண்டு, கிடைத்த ஊதியத்தை பயன்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கு படித்து வந்தார்.
1999-ல் குரூப் 2 தேர்வு எழுதி, 2000-ம் ஆண்டு இந்துசமய அறநிலையத்துறையில் ஆடிட் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து படித்து 2003-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வு எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று நேரடி டிஎஸ்பியாக பணியில் சேர்ந்தார். கடந்த 2009-ம் ஆண்டு சிவில்சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
ஐஏஎஸ் பணிக்கு வாய்ப்பு இருந்தும், தான்விரும்பிய ஐபிஎஸ் பணியை தேர்ந்தெடுத்தார். பயிற்சிக் காலம் முடிந்த பின்னர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், சிபிசிஐடி எஸ்.பி.,யாக பணியாற்றினார். சென்னை அண்ணா நகரில் துணை ஆணையராகவும் பணியாற்றினார்.
பின்னர், டிஐஜி பதவி உயர்வு பெற்று கோவை சரக டிஐஜியாக கடந்த ஜனவரி மாதம் முதல் விஜயகுமார் பணியாற்றி வந்தார். தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு, டிஎன்பிஎஸ்சி மோசடி வழக்கு உள்ளிட்ட வழக்குகளை திறமையாக விசாரித்தார்.
தனது மகளை மருத்துவராக்க வேண்டும் என விரும்பிய விஜயகுமார் அதற்கேற்ப நன்றாக படிக்குமாறு தனது மகளிடம் அறிவுறுத்தியுள்ளார். இதற்கிடையே, டிஐஜி விஜயகுமார் பேசியதாக, ‘இந்த உலகமே ஒரு மாயை. இந்த மாயையில் நடப்பது எல்லாமே மாயையின் சாயல்கள்..’ என 6 நிமிடம் 11 விநாடிகள் ஓடக்கூடிய ஆடியோ சமூகவலைதளங்களில் பரவியது. ஆனால், இந்த ஆடியோ தவறானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.