உத்தரப் பிரதேசத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதன் கிழக்குப் பகுதியை பாஜக குறி வைத்துள்ளது. இங்கு கடந்த 3 மாதங்களில் 4 ஆவது முறையாகப் பிரதமர் நரேந்தர மோடி வருகை புரிந்துள்ளார்.
பாஜகவிற்கு 2014 இல் பூர்வாஞ்சலின் 22 மக்களவை தொகுதிகளில் 21 இல் வெற்றி கிடைத்தது. 2017 இல் 124 சட்டப்பேரவை தொகுதிகளில் பெரும்பாலனவற்றை பெற்றது பாஜக.
கோரக்பூரின் யோகி ஆதித்யநாத் உ.பி.,யின் முதல்வரானார். எனவே, இப்பகுதியை அடுத்த வருட சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் தக்கவைக்கும் முயற்சியிலும் பாஜக இறங்கியுள்ளது.
கடந்த 20 ஆம் தேதி இங்குள்ள குஷி நகருக்கு வந்து சர்வதேச விமான நிலையத்தை திறந்து, ஒரு மருத்துவக் கல்லூரிக்கும் அடிக்கல் நாட்டினார். அதற்கு முன் இரண்டு முறை அப்பகுதியில் அமைந்துள்ள தம் எம்.பி தொகுதியான வாரணாசிக்கும் வந்திருந்தார்.
பிறகு நான்காவது முறையாக நேற்று (அக்.25) இங்குள்ள சித்தார்த் நகர் மற்றும் தம் எம்.பி தொகுதியான வாரணாசிக்கு வந்தார் பிரதமர் மோடி. சித்தார்த் நகரிலிருந்தபடி ஒன்பது மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைத்துள்ளார்.
ரூ.2329 கோடி செலவிலானதில் 2500 படுக்கைகளுடன் 5000 மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு வேலை கிடைக்க உள்ளது. இந்த 9 இல் ஐந்து பூர்வாஞ்சலில் அமைந்துள்ளது. அதன் மற்ற மாவட்டங்களுக்கும் விரைவில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கத் திட்டமிடப்படுவதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.
பிறகு வாரணாசிக்கு சென்றவர் அங்கு ’ஆத்மநிருபர் ஸ்வஸ்த் பாரத்’ எனும் மருத்துவ ஆயுள்காப்பீட்டுத் திட்டத்தை துவக்கி வைத்தார். ஏற்கெனவே, கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையும் துவக்கப்பட்டுள்ளது.
இதனால், பூர்வாஞ்சல் பகுதி உ.பி.,யின் மருத்துவ வசதிகள் அதிகம் பெற்ற பகுதியாக மாறி வருகிறது. இதன் பின்னணியில் அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தலும் இடம் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பாஜகவின் உ.பி. மாநில நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, “உ.பி.,யின் மத்தியப் பகுதியில் பாஜகவின் செல்வாக்கு உள்ளது. ஆனால், டெல்லியின் அருகிலுள்ள உ.பி.,யின் மேற்குப்பகுதியில் விவசாயப் போராட்டத்தின் தாக்கம் உள்ளது. அங்குள்ள ஜாட் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம்.
ஜாட் சமூகக் கட்சியின் ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் அஜீத்சிங்கும் சமீபத்தில் இறந்தமையால் அவரது அனுதாப வாக்குகளும் பாஜகவை பாதிக்கும். எனவே, பூர்வாஞ்சலை தக்கவைக்கும் கட்டாயம் கட்சிக்கு உள்ளது” எனத் தெரிவித்தனர்.
உ.பி.யில் மிகவும் நலிவடைந்த பகுதியாகக் கருதப்படுவது பூர்வாஞ்சல் எனப்படும் கிழக்குப் பகுதி. பூர்வாஞ்சலை, உ.பி.,யில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் கண்டுகொள்வதில்லை எனப் புகார் உள்ளது.
இங்கு பாஜக 2013 முதல் கவனம் செலுத்துகிறது. இதன் முக்கிய மாவட்டமான கோரக்பூரில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின் 2013 இல் மோடி வந்திருந்தார்.
அப்போது அவர், பூர்வாஞ்சால் பின்பகுதியிலிருக்கக் காரணம் அன்றய மத்திய, மாநில அரசுகள் எனப் புகார் தெரிவித்தார். அதை மாற்றிக் காட்டுவதாகவும் உறுதி அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.