தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையானது என்ற தகவல் தவறானது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” தீபாவளிக்கு முன்பாக ‘டாஸ்மாக் இலக்கு’ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, அதனைச் சுட்டிக்காட்டிய பிறகு தனியார் தொலைக்காட்சி நீக்கியது. தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.
அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் தனியார் தொலைக்காட்சி செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் தனியார் தொலைக்காட்சி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தனியார் தொலைக்காட்சி ஒன்று தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த அக்.22, 23 மற்றும் 24 ஆகிய 3 நாட்களில் ரூ.708 கோடிக்கு டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், தீபாவளி பண்டிகை தினமான நேற்று (அக்.24) ஒரே நாளில் மட்டும் ரூ.244 கோடிக்கு மது விற்பனையானதாகவும் செய்தி ஒளிபரப்பியது.