ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்து, தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்தால்தான், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை வெல்ல முடியும் என அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமமுக பொதுச் செயலாளர் தினகரன் நேற்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர், கொள்ளிடம் வேட்டங்குடியில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தற்போது செயல்படாத கட்சியாக உள்ளது. இதற்கு காரணம் பழனிசாமிதான். அவர் எங்களுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மட்டுமில்லாமல் ஜெயலலிதாவுக்கும் துரோகம் செய்துள்ளார். பழனிசாமி வீழ்ந்தால்தான் அதிமுகவுக்கும், தமிழகத்துக்கும் நல்லது என்றார்.

முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு தேவையான திட்டங்கள் கிடைக்க வேண்டும் என்றால், நமக்கான பிரதமரை நாமே தேர்வு செய்ய வேண்டும். அதற்கு, ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒன்றிணைந்து, தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்தால்தான் 2024நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும். திமுகவை வெல்ல முடியும். கூட்டணி இல்லை என்றாலும் தனித்து போட்டியிடும் தைரியம் அமமுகவுக்குஉண்டு என்றார்.