கும்பகோணம்நீட் தேர்வு விவகாரத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டினார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆட்சி, பணம், அதிகார பலத்தை எதிர்த்து தேமுதிக களத்தில் இறங்கியுள்ளது.
கடந்த 9 மாத திமுக ஆட்சியில் ஒரு சில நல்ல விஷயங்கள் செய்திருந்தபோதும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்ற மனக்குறை மக்களிடம் உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவது என்ற வாக்குறுதியை நிறைவேற்றாதது, பொங்கல் பரிசுத் தொகை வழங்காதது, பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கியது போன்றவை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளன.
நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறியதை திமுக இதுவரை செயல்பாட்டுக்குக் கொண்டு வரவே இல்லை. நீட் தேர்வு விவகாரத்தை வைத்துக் கொண்டு திமுக அரசியல் செய்கிறது.
பள்ளிக்கூடங்களில் மதம் கூடாது, மாணவர்களிடையே பாகுபாடு கூடாது என்பதற்காகத்தான் சீருடை அறிமுகம் செய்யப்பட்டது. மாணவர்களிடையே கல்வி மட்டும்தான் இருக்க வேண்டும். கர்நாடகாவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக தேமுதிக துணை நிற்கும் என தெரிவித்தார்.