புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்க, காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு கடந்த பிப்ரவரி மாதம் ராய்ப்பூரில் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்தது. இதன் அடிப்படையில், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79-வது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் செயற்குழுவில் பல்வேறு மாற்றங்களை செய்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி புதுப்பிக்கப்பட்ட காங்கிரஸ் செயற்குழுவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காங்கிரஸ் செயற்குழுவில் தான் இடம்பெற்றது தனக்கு கவுரவும் என சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கடந்த காலங்களில் காங்கிரஸ் தலைவர்களாக இருந்ததின் மூலம் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி ஆகியோரும் செயற்குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஏற்கெனவே 24 ஆக இருந்த செயற்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை தற்போது 39 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 18 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் 14 பொறுப்பாளர்களும் அடக்கம்.

இந்த செயற்குழுவில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான், முன்னாள் மத்திய முதல்வர் திக்விஜய சிங், முன்னாள் சபாநாயகர் மீரா குமார், முன்னாள் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முன்னாள் மக்களவை உறுப்பினர் தீபா தாஸ்முன்ஷி, மக்களவை உறுப்பினர் கௌரவ் கோகோய் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சையத் நசீர் உசேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.