டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவில் 4ம் அலைக்கான சாத்தியக்கூறுகள் உருவாகி இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் உலகை மிரட்டி எடுத்த கொரோனா,  பின்னர் காமா, பீட்டா, ஓமிக்ரான் என உருமாற்றம் அடைந்து மக்களை அச்சுறுத்தியது. படிப்படியாக தொற்று பரவல் விகிதம் சரிந்ததை அடுத்து இந்தியாவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் சீனா, தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதால் அந்த நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உணரப்பட்ட டெல்லி, மராட்டியத்தில் முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், டெல்லியில் கடந்த 15 நாட்களில் மட்டும் 500%அளவிற்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. டெல்லி அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த 15 நாட்களில் பாதிப்பு எண்ணிக்கை 500% அளவிற்கு உயர்ந்து இருப்பது தெரியவந்தது. கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்திருப்பதாக ஆய்வை நடத்திய நிறுவனம் கூறியுள்ளது. இந்த எண்ணிக்கையை கணக்கிடும் போது, ஏற்கனவே கணித்தது போல இந்தியாவில் 4வது அலைக்கான சாத்தியக்கூறுகள் தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயம் ஆக்கபடவேண்டும் என அறிவுறுத்திய அவர்கள், தவறினால் விளைவுகள் மோசமாக இருக்கலாம் என எச்சரித்துள்ளனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here