கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, நேற்று முன்தினம் நெல்லித்துறை ஊராட்சி, குண்டுக்கல் துறை என்ற இடத்தில் பவானி ஆற்றின் திட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அன்று மதியம் பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி கரைக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். அங்கிருந்த மரத்தின் மீது ஏறி காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், மேட்டுப்பாளையம் வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸாருக்கு அங்கு விரைந்து வந்தனர்.
தீயணைப்புத்துறையினர் கயிறு மற்றும் பரிசல் மூலமாக காதல் ஜோடியை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர். பின்னர், இருவரையும் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.