வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசினுடைய மெத்தன போக்கை மறைப்பதற்காக அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறிப்பாக வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பல்வேறு துறை சார்ந்த பணிகளை தங்கள் வாழ்வாதாரத்திற்காக செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்ற தவறான செய்திகளின் அடிப்படையிலே, கடந்த இரண்டு நாட்களாக வட மாநில தொழிலாளர்கள் மத்தியிலே அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் மாநிலங்களுக்கு திரும்ப முயற்சிக்கும்போது தமிழக அரசு அதற்குண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டு, வட மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்போம் என்று உறுதியளித்து பதட்டத்தை குறைத்தார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள, தமாகா உட்பட பல எதிர்கட்சிகள் இந்த பிரச்சனை விரைவில், சுமுகமாக தீர வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டன. பாஜக தலைவர் அண்ணாமலை, ஒருபுறம் அரசுப் பணிகளை பாராட்டியும், மறுபுறம் வருங்காலங்களில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காகவும் சில உண்மை நிலைகளை எடுத்துக் கூறினார். நல்ல கருத்துகளை முன்வைத்தார். இருந்தாலும் கூட அவர் கூறிய நல்ல கருத்துக்களை, யோசனைகளை எடுத்துக்கொள்ள முடியாமல், பொறுத்துக்கொள்ள முடியாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியை மனதில் வைத்துக்கொண்டு, அவர் மீது வழக்குப் போட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

இந்த விவகாரத்தில் அரசினுடைய மெத்தன போக்கை மறைப்பதற்காக தமிழக அரசு இந்த நிலையை எடுத்திருப்பது அரசின் நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எனவே தமிழக அரசு காழ்ப்புணர்ச்சி அரசியலில் ஈடுபடாமல் பல மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் வாழும் மக்களின் நலன் காக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.