அனிருத் இசையில் கமல் குரலில் ‘விக்ரம்’ படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘கைதி’, ‘மாஸ்டர்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து, கிட்டத்தட்ட 8 மாதங்களில் ‘விக்ரம்’ படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துள்ளது. அனிருத்தின் இசையில், இந்தப் படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கமல்ஹாசனைப்பொறுத்தவரை அவர் கடைசியாக 2018-ம் ஆண்டு விஸ்வரூபம்-2 படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அரசியலுக்கு திரும்பியவர், படம் நடிக்கவேயில்லை. 4 ஆண்டுகள் கழித்து தற்போது அவரது நடிப்பை திரையில் காண ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்று மாலை 7 மணிக்கு கமல் குரலில், அனிருத் இசையில் ‘விக்ரம்’ படத்தின் முதல் பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.