“தமிழகத்தில் பாஜகவுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது” என்று, அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து திருச் செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் தூத்துக்குடி மாநகராட்சியை சிங்கப்பூர் போன்று சுத்தமான, சுகாதாரமான மாநகராட்சியாக மாற்றுவோம். வீடு மற்றும் சொத்து வரியை 50 சதவீதம் குறைப்போம். வணிகர் களுக்கான தொழில் வரியை ரத்து செய்வோம். 60 வார்டுகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து கொடுப்போம்.
கடந்த 8 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு 80 ஆண்டுகால சலிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரமுடியாது என, ராகுல் காந்தி கூறியிருக்கிறார். 2014-ல் மோடி பிரதமராக முடியாது என்றார். 2019-ல் மீண்டும் மோடிக்கு வாய்ப்பில்லை என்றார். ஆனால், அவர் சொன்னது பொய்த்தது. அதுபோல தமிழகத்தில் பாஜக ஆட்சிக்குவர முடியாது என அவர் கூறிய மறுநாளே, உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். ராகுல் காந்தி கூறியதன் மூலம் தமிழகத்தில் பாஜகவுக்கு நல்ல காலம் தொடங்கிவிட்டது.
காங்கிரஸ் கட்சி தமிழக மக்களுக்கு துரோகங்களைத் தான் செய்துள்ளது. 1965-ல் இந்தியை திணித்தது, 1974-ல் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது, 2009-ல் இலங்கை தமிழர் பாதிப்புக்கு உதவியது என, தொடர் துரோகங்களை காங்கிரஸ் கட்சி செய்துவந்துள்ளது. தமிழர் நலன் பற்றி பேச அக்கட்சிக்கு அருகதை இல்லை என்றார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பி.எம்.பால்ராஜ், மாநில அமைப்புச் செயலாளர் விநாயக மூர்த்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, மகளிரணி மாநில தலைவர் உமாரதி, பொதுச் செயலாளர் சிவமுருக ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.