அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராமத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலைய முகவரை மாற்றக் கோரி கிராம மக்கள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் மனு அளித்தனர்.

பெரியநாகலூர், சின்னநாகலூர், காட்டுப்பிரிங்கியம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி பெரியநாகலூர் கிராமத்தில் ஆவின் பால் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.

இங்கு கடந்த சில மாதங்களாகக் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு முறையாகப் பணம் தரவில்லை. பாலை முழுமையாகக் கொள்முதல் செய்வதில்லை எனக் குற்றம் சாட்டியும், பால் முகவரை மாற்ற வலியுறுத்தியும் கடந்த 9-ம் தேதி மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டு, ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில், ஜெயங்கொண்டத்தில் இன்று (அக் 13) நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் காரில் சென்றபோது, பெரியநாகலூர் பரிவுப் பாதை அருகே மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள், பால் கொள்முதல் நிலைய முகவரை மாற்றக் கோரி மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.