தமிழகத்தில் பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படாததால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் கணிதம் உள்ளிட்ட பாடங்களை நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் தமிழக அரசால் வழங்கப்படுகின்றன. பொதுவாக பள்ளிகளில் மே மாதம் மாணவர் சேர்க்கை நடைபெறும்போதே புத்தகம், நோட்டுப்புத்தகம், சீருடை, ஜாமெட்ரி பாக்ஸ் உள்ளிட்ட அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கப்படும்.

இவற்றை ஆசிரியர்கள் அந்தந்த வட்டாரத்தில் உள்ள ஒருங்கிணைப்பு மையத்துக்குச் சென்று எடுத்துவந்து மாணவர்களுக்கு வழங்குவார்கள். அதன்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்புவரை தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்பட 5 பாடங்களுக்கு 5 நோட்டுப்புத்தகங்களும், ஓவிய நோட்டுப்புத்தகம், ஜியாமெட்ரி நோட்டும், வரைபடம் உள்பட 10 நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படும்.

ஒரு மாதம் நெருங்குகிறது

இந்த ஆண்டு ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசுமற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்அனைவருக்கும் இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், பள்ளிகள் திறந்து ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், இன்னும் நோட்டுப்புத்தகங்கள் வழங்கப்படவி்ல்லை. இதனால், மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களும் கணிதம் உள்ளிட்ட பாடங்களை நடத்த முடியாமல் சிரமப்படுகிறார்கள்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறைக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் அச்சடித்து வழங்கும் ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் அச்சிட்டு வழங்குவதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் மேம்பாட்டுக்கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரி அனுமதி வழங்கும். அதன்படி, இந்த ஆண்டும் ஒப்பந்தம் கோரப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

தாள் தட்டுப்பாடு

இந்நிலையில், இலவச நோட்டுப்புத்தகங்கள் அச்சடிக்க பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட ரக காகிதம், கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும்காகித நிறுவனத்திடமிருந்து பெறப்படும். தற்போது அந்த குறிப்பிட்ட ரக தாளின் விலை உயர்த்தப்பட்டதாலும், தட்டுப்பாடு காரணமாக போதிய சப்ளை இல்லாத நிலையிலும் அந்ததாளை தேவையான அளவு கொள்முதல் செய்து நோட்டுப்புத்தகங்கள் அச்சிட இயலவில்லை.

அதனால் நோட்டுப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணியில் கடந்த 3 மாதங்களாக தொய்வு ஏற்பட்டுள்ளது . அதுமட்டுமின்றி, நோட்டுப்புத்தகங்கள் அச்சிடுவதற்கான ஒப்பந்த நிபந்தனைகளில் அரசுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே உடன்பாடு எட்டப்படாததால் பலரும் நோட்டுப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணியை தொடங்கவில்லை.

தமிழகத்தில் பல நகரங்களில் நோட்டுப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி நடைபெற்றாலும் 300-க்கும் மேற்பட்ட நவீன அச்சகங்கள் உள்ள சிவகாசியில்தான் கணிசமான அளவுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன.

குறிப்பிட்ட ரக தாளின் விலை கட்டுப்படியாகும் அளவுக்கு குறைவதுடன் அரசு விதிக்கும் நிபந்தனைகளில் உடன்பாடு எட்டப்பட்டால்தான் எங்களால் இலவச நோட்டுப்புத்தகங்களை விரைந்து அச்சிட்டு வழங்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெற்றோர் எதிர்பார்ப்பு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரைஇலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ரூ.206 கோடி செலவில் 3 கோடியே 51 லட்சத்து 95 ஆயிரம் பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், நோட்டுப்புத்தகங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. எப்போது நோட்டுகள் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை.

அதனால், மாணவ, மாணவிகள்தங்கள் சொந்த செலவில் நோட்டுப்புத்தகங்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் ஆசிரியர்களே தங்கள் சொந்த செலவில் மாணவர்களுக்கு நோட்டுகள் வாங்கித்தருவதாகவும் தெரிகிறது. பள்ளிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்களை விரைவில் வழங்கி கற்றல்-கற்பித்தல் பணி தங்குதடையின்றி நடைபெற தமிழக அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.