உதவித் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உறுதியளித்ததை அடுத்து, சென்னையில் நடந்து வந்த மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் கூறியது: “மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை குறித்து முதல்வரிடம் எடுத்துக் கூறப்பட்டது. அதற்கு முதல்வர், எனக்கு இந்த பிரச்சினை குறித்து தெரியும், தேர்தல் வாக்குறுதியிலும் அதனை கூறியிருக்கிறோம். எனவே, நிதிநிலையைப் பொறுத்து, படிப்படியாக அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று சங்கத்தினரிடம் எனது சார்பில் தெரிவிக்கும்படி கூறினார்.
அதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சங்கத்தினரும் முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர். சிறப்புக் கூட்டம் நடத்தி மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகள் குறித்து பேசி உரிய தீர்வு காணப்படும்” என்று அவர் கூறினார்.
முன்னதாக, தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை தமிழக அரசு 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்; கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கத்தின் சார்பில், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு திரண்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் எழிலகத்திற்கு முன்பாக தடுத்து நிறத்தனர். இதேபோல் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்து மற்றும் ரயில்கள் மூலம் வந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகளை போலீசார், கோயம்பேடு, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. எனவே அதே போல, தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சுவார்த்தை நடத்தி, உதவித் தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.