உலகம் சந்திக்கும் பல்வேறு சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15, 16 தேதிகளில் ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடந்தது. இந்தியா, சீனா, அமெரிக்கா, கனடா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், அர்ஜென்டினா, மெக்சிகோ, தென் கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், துருக்கி, சவூதி அரேபியா ஆகிய 19 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் ஜி-20 கூட்டமைப்பின் உறுப்பினர்களாக உள்ளன. இந்தோனேசியாவில் நடந்த உச்சிமாநாட்டில் 2023-ஆம் ஆண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றது.

இந்நிலையில் இதுகுறித்து தனது மாதாந்திர, மனதின் குரல் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது, “ஜி-20 நாடுகளின் தலைமையை இந்தியா டிசம்பர் 1 ஆம் தேதி முறைப்படி ஏற்க இருக்கிறது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு. உலகின் நன்மைக்காக இந்த வாய்ப்பை இந்தியா சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். அமைதி, ஒற்றுமை, சுற்றுச்சூழல், வளர்ச்சி என எதுவாக இருந்தாலும், இதில் உலகம் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வை அளிக்க இந்தியாவால் முடியும்” என்று பேசினார்.